
என் காதலியே !
வெவ்வேறு கிளைகளில்,
பூத்த பூக்கள் நாம்.
உன்னைப்பார்த்து நான்,
என்னைப்பார்த்தும் நீ.
பிறந்த நொடிப்பொழுதே,
பிரியா உறவுப்பூண்டோம்.
மலர்வதும், உதிர்வதும்,
ஒரே பொழுது தான் என்றாலும்,
அழகிய மலரே,
நீ தரையில் விழுவானேன் ?
நான் இல்லையோ,
உன்னைத் தரையிலும் தாங்கிக்கொள்ள ?
என் ஆசை !
பூங்காற்றே, வேகமாக வீசு,
அவளை தொட்டுப்பார்க்க ஆசை.
கிளைகளே, இன்னும் நன்றாக ஆட்டம் போடுங்கள்,
அவள் முகத்தை, நேருக்கு நேர் பார்க்க ஆசை.
பனித்துளியே, எங்கள் இருவருரையும் உரசித்தவழ்ந்துப்போ,
உன்னுள், உன்னைவிட ஒளிரும் அவளின் மேனியைப்பார்க்க ஆசை.
சூரியனே, என்னை சீக்கிரம் சுட்டெரித்துவிடு,
அவளுக்கு முன் நான் தரைச்சேர ஆசை.
என் வேண்டுகோள் !
மானிடக்காதலனே, உன் காதலிக்காக,
என் காதலியை, கொய்துப்போகாதே.
தேனீக்களே, வண்டுகளே, அனைவரும் வந்து என்மேல் ஆட்டம்போடுங்கள்,
என்னுள் இருக்கும் உயிர் ஊற்றை அவளுக்கும் பருகக்கொடுங்கள்.
தெய்வங்களே, உங்களிடமும் ஒரு வேண்டுகோள்,
அவள் காய்ந்து, உலர்ந்து, மடிந்து, விழும்போது,
அவளின் உயிரற்ற மேனியை,
மண்ணில் விழாமல் என்மேல் விழச்செய்யுங்கள்.
என் வேதனை !
மான்களைப்போல் நாங்களும் துள்ளிக்குதித்து விளையாடக்கூடாதோ ?
குயில்களைபோல் நாங்களும் பறந்துப்பாடி மகிழக்கூடாதோ ?
மனிதர்களைப்போல் நாங்களும் சிரித்துப்பேசக்கூடாதோ ?
காதலே இந்த ஜென்மம் வெறும் சாதலுக்காகவோ ?
பூக்களின் காதலுக்கு தெய்வங்களும் தடைதானோ ?
உலகையே வியக்கும் அழகிற்கு, ஆயுள் அற்பம்தானோ ?
தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் அரக்கர்களுக்கும் மிருகங்களுக்கும் தான் காதலோ ?
தாவரங்களெல்லாம் என்ன, கேவலமோ ?
எங்களுக்கும் உணர்வுண்டு,
நாங்களும் உயிர் தானே !
என் காதல் !
தாயின் கருவிலேயே,
பூத்தும்,
வாழ்ந்தும்,
உதிர்ந்தும் போகும் எங்களை,
கருவிலேயே கொலைச்செய்யாதீர்கள்.
புனிதத்திலும் புனிதம் எங்கள் காதல்.
மனிதர் உணரும் காதலிலும் மேலானக்காதல்.
மனிதர்களே,
நீங்கள் அதை உணராவிட்டாலும்,
புரிந்தாவது கொள்ளுங்கள்.
பூக்களை பறிக்காதீர்கள் !
பூக்களை பறிக்காதீர்கள் !
- வில்ஸ்
Photograph by Nandini S.
